சீனாவில் உருவான கொரோனாவால் உலகமே முடங்கியுள்ளது. மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருக்கும் கொரோனா, உலக மக்களை வீட்டிற்குள் அடைத்துள்ளது. சீனா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் பேரிழப்பை சந்தித்துள்ள நிலையில், அமெரிக்காவிலும் கொரோனாவின் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவருகிறது. 

உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 14ஆக உள்ளது. கொரோனா உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதல் மட்டுமே ஒரே வழி என்பதால் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஊரடங்கு அமலில் உள்ளது. 

கொரோனா எதிரொலியாக கிரிக்கெட் தொடர்கள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் தொடங்குகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இங்கிலாந்தில் கவுண்டி உட்பட உள்நாட்டு போட்டிகள் அனைத்தும் மே 28ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 28 வரை எந்த போட்டியும் நடத்தப்படமாட்டாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது. 

இனிமேல் எப்போது கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படும் என்பதே தெரியாத நிலையில், எப்போது தொடங்கினாலும் அதற்கு தயாராக இருக்கும் விதமாக தன்னை ஃபிட்டாக வைத்திருப்பதில் உறுதியாக இருக்கிறார் ஜோ ரூட். தனது டிரெய்னிங்கை அவர் நிறுத்தவேயில்லை. 

இலங்கை தொடர் ரத்தானதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இந்நிலையில், இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர், ஓய்வெடுக்க டைம் கிடைத்தது நல்ல விஷயம் தான். எனது உடற்தகுதியையும் ஃபிட்னெஸையும் பராமரிக்க வேண்டியது அவசியம். எப்போது வேண்டுமானாலும் களத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். நான் எப்போதுமே ஆக்டிவானவன். எனது மகன் என்னை பிசியாகவே வைத்திருக்கிறான். சில ஏரியாக்களில் நான் மேம்பட இது சரியான வாய்ப்பு என்று ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீத்தர் நைட்டும் ஃபிட்னெஸில் கவனம் செலுத்திவருகிறார்.