நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் ஒரு வீரர் கூட சரியாக ஆடவில்லை. அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் வெறும் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் க்ராவ்லி 43 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 141 ரன்கள் மட்டுமே அடித்தது.
9 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் டேரைல் மிட்செல் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அவர் 108 ரன்கள் அடிக்க, 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 285 ரன்கள் அடித்தது.
277 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் 69 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு ரூட்டும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். 5வது விக்கெட்டுக்கு 90 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த கேப்டன் ஸ்டோக்ஸ் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான ஜோ ரூட் ஒருமுனையில் நங்கூரம் போட்டு பேட்டிங் ஆடினார். அபாரமாக ஆடி சதமடித்த ரூட்115 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 6வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த பென் ஃபோக்ஸும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி 32 ரன்கள் அடித்து கடைசி வரை நின்று போட்டியை முடித்தார்.
5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
