டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகிய இருபெரும் ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்துள்ளார் ஜோ ரூட். 

சர்வதேச கிரிக்கெட்டில் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட், 2021ம் ஆண்டு மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறார். இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இந்தியா மற்றும் இங்கிலாந்தில் நடந்த 2 தொடர்களிலும் அபாரமாக பேடிட்ங் ஆடிய ஜோ ரூட், இலங்கைக்கு எதிராகவும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார்.

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் ஆஷஸ் தொடரிலும் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக ஆடி தனி நபராக அணியை காப்பாற்றிவருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு மிகச்சிறப்பாக ஆடிவரும் ஜோ ரூட், பல ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்துவருகிறார். 

ஒரு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்கரா, ஜஸ்டின் லாங்கர் ஆகியோரின் சாதனையை தகர்த்த நிலையில், இப்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் சாதனைகளையும் தகர்த்துள்ளார்.

அடிலெய்டில் நடந்துவரும் டெஸ்ட், இந்த ஆண்டில் ரூட் ஆடும் 14வது டெஸ்ட். இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 62 ரன்களை குவித்த ரூட், இந்த ஆண்டில் இதுவரை 1606 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக ரன்களை குவித்த சுனில் கவாஸ்கர் (1979ல் 1555 ரன்கள்) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (2010ல் 1562 ரன்கள்) ஆகிய இருவரின் சாதனையையும் தகர்த்துள்ளார்.

இந்த பட்டியலில் முதலிரண்டு இடங்களில் முறையே பாகிஸ்தானின் முகமது யூசுஃப் (2006ல் 1788 ரன்கள்) மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் (1976ல் 1710 ரன்கள்) ஆகிய இருவரும் உள்ளனர்.