இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. 3-0 என டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி. இதையடுத்து நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து ஹாமில்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் இரட்டை சதம் மற்றும் ரோரி பர்ன்ஸின் சதத்தால் 476 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 101 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட போதிலும், வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து அபாரமாக ஆடி இருவருமே சதமடித்தனர். 2 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 241 ரன்களை அடித்திருந்த நிலையில், கடைசி நாளான இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது செசனில் மழை வந்தது. மழை நிற்காததால் ஆட்டம் முன்கூட்டியே டிரா என அறிவிக்கப்பட்டுவிட்டது. மழை பெய்யாமல் இருந்திருந்தாலும் இந்த போட்டி டிரா தான் ஆகியிருக்கும்.

இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் சதமடித்தார். அவர் 62 ரன்களில் களத்தில் இருந்த போது ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் மிகவும் எளிதான, கையில் அதுவாகவே வந்து விழுந்த கேட்ச்சை தவறவிட்டார் ஜோ டென்லி.

அந்த வீடியோவை பகிர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டென்லியை கிண்டலடித்துவருகின்றனர். கிரிக்கெட் வரலாற்றிலேயே இதைவிட ஈசியான கேட்ச்சை யாரும் தவறவிட்டிருக்கமாட்டார்கள் என்று கிண்டலடித்துவருகின்றனர்.