இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் எல்லா காலத்திலும் டாப் 10 தலைசிறந்த வீரர்களில் ஒருவருமானவர் மஹேலா ஜெயவர்தனே. 

ஜெயவர்தனே 1997ம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணியில் ஆடினார். சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட ஜெயவர்தனே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் இருக்கிறார்.

இலங்கை அணிக்காக 448 ஒருநாள் போட்டிகளில் 12,650 ரன்களையும் 149 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11,814 ரன்களையும் குவித்துள்ளார். 2015ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஜெயவர்தனே, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துவருகிறார்.

அனைத்து காலத்திலும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் ஜெயவர்தனேவிடம், இந்தக்காலத்து பவுலர்களில் யார் உங்களுக்கு நெருக்கடி கொடுப்பார்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பும்ரா என ஜெயவர்தனே பதிலளித்தார்.

ஐபிஎல்லில் பும்ரா ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜெயவர்தனே பயிற்சியாளராக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. சமகால கிரிக்கெட்டின் அச்சுறுத்தலான மற்றும் அபாரமான ஃபாஸ்ட் பவுலராக திகழும் பும்ரா, நம்பர் 1 ஒருநாள் பவுலராக திகழ்கிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனுடன் துல்லியமாக பந்துவீசும் பும்ரா, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார்.