ஒரு காலத்தில் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்த பாகிஸ்தான் அணி, இப்போது இருக்கும் இடம் கூட தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டது. அந்தளவிற்கு படுமோசமான அணியாக திகழ்கிறது.

பாகிஸ்தான் அணியின் பவுலிங் எல்லா காலக்கட்டத்திலுமே சிறந்தே விளங்கியிருக்கிறது. ஆனால் பேட்டிங் அப்படியில்லை. கடந்த சில ஆண்டுகளாக அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் வலுவில்லை. பேட்டிங்கும் சரியில்லை. பாகிஸ்தான் அணி வீரர்களின் ஃபிட்னெஸும் படுமோசமாக உள்ளது. ஃபிட்னெஸில் மோசமாக உள்ளனர். 

பாகிஸ்தான் வீரர்கள் ஃபிட்னெஸை மேம்படுத்த வேண்டும் என்றும் சரியாக ஆடாத வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதை தவிர்த்து, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அதற்கு உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்த வேண்டும் எனவும் அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்திவருகின்றனர். 

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரில் தற்போதைக்கு பாபர் அசாம், இமாத் வாசிம் உள்ளிட்ட ஒருசில வீரர்கள் தான் பேட்டிங்கில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுகின்றனர். மற்றவர்கள் அரிதினும் அரிதாகத்தான் ஸ்கோர் செய்கின்றனர். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இப்போதைய பாகிஸ்தான் அணியில் எந்தவொரு வீரராவது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒரு அணியில் இடம்பிடிக்க முடியுமா என்பதே என் கேள்வி. கண்டிப்பாக முடியாது. ஏனெனில் அந்தளவிற்கு மோசமாக ஆடுகின்றனர். இப்போதைய பாகிஸ்தான் அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவர் கூட மேற்கண்ட அணிகளில் ஆட தகுதியற்றவர்கள். 

பாகிஸ்தான் அணியில் பவுலிங் நன்றாகவுள்ளது. ஆனால் பேட்டிங் ஆர்டர் சரியில்லை. அன்றன்றைக்கு அந்தந்த நாளை ஓட்டுவதற்காக, தினக்கூலி போல செயல்படுகின்றனர். அப்படியென்றால், அன்றன்றைக்கு ஆடி அதற்கான பணத்தை வாங்கிக்கொண்டு போகவேண்டியதுதானே.. இன்றைக்கு ஆடினால் இன்றைக்கு பணம்.. நாளைக்கு ஆடினால் நாளைக்கு பணம் என்று தினக்கூலி போல வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள்(பாகிஸ்தான் வீரர்கள்) தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள்.. நீங்கள் சரியாக ஆடவில்லையென்றால் உங்களுக்கு எதற்கு ஊதியம்? இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பணி என்று கடும் காட்டமாக விளாசியுள்ளார்.