இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா விளக்கமளித்துள்ளார்.
இந்தியா முன்னிலை:
இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு, இலங்கை அணி மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. நாளை தொடங்குகிறது இந்த போட்டி.
குல்தீப் யாதவ் விடுவிப்பு:
இதற்கிடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு பின், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டார். 2வது டெஸ்ட்டில் ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்ஸர் படேலை ஆடவைப்பதற்காகத்தான் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
குல்தீப் யாதவுக்கு எப்படியும் 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்பதால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
பும்ரா விளக்கம்:
இதுகுறித்து பேசிய ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் நீண்டகாலமாக இந்திய அணியின் பயோ பபுளில் உள்ளார். அடுத்ததாக ஐபிஎல்லில் ஆடவிருப்பதால் அப்போதும் 2 மாதம் தொடர்ச்சியாக பபுளில் இருக்க வேண்டியுள்ளது. அவர் எப்படியும் 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெறப்போவதில்லை. எனவே ஐபிஎல்லுக்கு முன் அவரது குடும்பத்துடன் இருக்கட்டும் என்பதற்காக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று பும்ரா தெரிவித்தார்.
