டி20 உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ளார் ஜஸ்ப்ரித் பும்ரா.
டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 1-லிருந்து அரையிறுதிக்கு 2வது அணியாக முன்னேற, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. க்ரூப் 2-ல் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்குமே வாய்ப்புள்ளது.
அந்தவகையில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்தை எதிர்த்து ஆடிய இந்திய அணி, இந்த தொடரில் முதல்முறையாக டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
குறைந்த ஸ்கோருக்கு ஸ்காட்லாந்தை சுருட்டி, இலக்கை வேகமாக அடித்து வெற்றி பெறும் முனைப்பில், ஃபீல்டிங்கை தேர்வு செய்த கேப்டன் கோலிக்கு, அவர் நினைத்ததை நடத்தி கொடுத்தனர் இந்திய வீரர்கள். ஃபாஸ்ட் பவுலர்கள் பும்ரா, ஷமியுடன் இணைந்து, ஸ்பின்னர்கள் ஜடேஜா, அஷ்வினும் அருமையாக பந்துவீச, வெறும் 85 ரன்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து அணி. முதல் விக்கெட்டை பும்ரா வீழ்த்தி விக்கெட் வேட்டையை தொடங்கிவைக்க, அதன்பின்னர் ஜடேஜா மற்றும் ஷமி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து வெறும் 86 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டியது இந்திய அணி. 7.1 ஓவரில் இந்த இலக்கை விரட்டிவிட்டால், நெட் ரன்ரேட்டில் ஆஃப்கானிஸ்தானை முந்தி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கலாம் என்ற நிலையில், இந்த இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடினர். ஸ்காட்லாந்து பவுலர்கள் போட்ட பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசிய இவர்கள், 5 ஓவர்களில் 70 ரன்களை குவித்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 30 ரன்னுக்கு ஆட்டமிழக்க, 18 பந்தில் ராகுல் அரைசதம் அடிக்க, 6.3 ஓவரிலேயே இந்திய அணி இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது இந்திய அணி.
இதையும் படிங்க - சென்னையின் செல்லப்பிள்ளை, ஆன் & ஆஃப் ஃபீல்டு எண்டர்டெய்னர் பிராவோ..!
இந்த போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய பும்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். 51 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பும்ரா, நேற்று ஆடிய தனது 52வது சர்வதேச டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற யுஸ்வேந்திர சாஹலின்(63 விக்கெட்டுகள்) சாதனையை முறியடித்து பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் ஃபைனலில் எந்தெந்த அணிகள் மோதும்..? ஷேன் வார்ன் போட்ட ரூட் மேப்
