உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்படும் இங்கிலாந்து அணி செம ஃபார்மில் உள்ளது. அந்த அணியின் அனைத்து வீரர்களுமே அபாரமாக ஆடிவருகின்றனர்.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதற்கேற்றபடியே அந்த அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. 

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், அடுத்த 3 போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று தொடரை வென்றுள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டி நாட்டிங்காமில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 341 ரன்கள் என்ற இலக்கை ஜேசன் ராயின் அதிரடி சதத்தால் கடைசி ஓவரில் எட்டி இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் ஜேசன் ராய் அதிரடி சதமடித்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்ததால்தான் மிடில் ஆர்டர்கள் சரியாக ஆடாதபோதிலும் இங்கிலாந்து அணியால் கடைசி ஓவரில் வெல்ல முடிந்தது. அந்தளவிற்கான நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். 

போட்டிக்கு பின்னர் தான் அவர் எவ்வளவு மனவேதனையை தாங்கிக்கொண்டு அணிக்காக ஆடினார் என்பது தெரியவந்தது. பிறந்து 7 வாரங்களே ஆன அவரது கைக்குழந்தைக்கு நள்ளிரவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன் தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு காலை 8.30 மணிவரை மருத்துவமனையிலேயே தூங்காமல் இருந்துவிட்டு அதன்பின்னர் 2 மணி நேர தூக்கத்திற்கு பின்னர் போட்டியில் கலந்துகொண்டு ஆடி அணிக்காக சதமடித்துள்ளார். போட்டி முடிந்ததும் உடனடியாக மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ஜேசன் ராய். ராயின் இந்த அர்ப்பணிப்பு கிரிக்கெட் ரசிகர்களை வியக்கவைத்துள்ளது.