ரோஹித்  சர்மா - டேவிட் வார்னர் ஆகிய இருவரில் யாருடன் தொடக்க வீரராக இறங்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு இங்கிலாந்து ஒருநாள் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக பதிலளித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மற்றும் அதிரடி தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர். இருவருமே தங்களது அணிகளுக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளை பெற்று கொடுத்தவர்கள். 

குறிப்பாக இவர்கள் இருவரும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆடிவரும் நிலையில், ரோஹித் சர்மாவும் இந்திய டெஸ்ட் அணியில் தனக்காக இடத்தை பிடித்துவிட்டார். 

ஆனாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் மிகச்சிறந்தவர்கள். ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் யாருமே நினைத்துக்கூட பார்க்கமுடியாத வகையில், 3 இரட்டை சதங்களை விளாசி சாதனை நாயகனாக திகழ்கிறார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசி, ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். 

ரோஹித் சர்மா ஒருபுறம் இந்திய அணிக்காக அபரிமிதமான ஆட்டத்தை ஆடிவரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரும் வேற லெவலில் ஆடிவருகிறார். வார்னர் அதிரடியான தொடக்க வீரர். ரோஹித் களத்தில் செட்டில் ஆக நேரம் எடுத்துக்கொண்டு பின்னர் தாறுமாறாக அடித்து ஸ்கோர் செய்வார். ஆனால் வார்னர், முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடக்கூடிய வீரர். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 123 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5267 ரன்களை குவித்துள்ளார். 

ரோஹித் - வார்னர் இருவருமே சிறந்த தொடக்க வீரர்கள். இந்நிலையில், சமகாலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டின் மற்றொரு அதிரடி தொடக்க வீரராக இருப்பவர் இங்கிலாந்தின் ஜேசன் ராய். இவர் கடந்த ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் முக்கிய பங்குவகித்தார். 2019 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக 7 இன்னிங்ஸில் பேட்டிங் ஆடி 443 ரன்களை குவித்தார். காயம் காரணமாக சில போட்டிகளில் ஆடவில்லை. 

ஜேசன் ராயும் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடக்கூடிய ஆக்ரோஷமான அதிரடி தொடக்க வீரர். இந்நிலையில், ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரோஹித் - வார்னர் ஆகிய இருவரில் யாருடன் தொடக்க வீரராக ஜோடி சேர்ந்து இறங்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு, ரோஹித் சர்மா என்று ராய் பதிலளித்தார்.