இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி சாம் கரனுக்கு பதிலாக மார்க் உட்டை அணியில் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2வது போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியது. இந்த போட்டியிலும் ஸ்மித் ஆடவில்லை.

இங்கிலாந்து ஆடும் லெவன்:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், டாம் கரன், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.

ஆஸ்திரேலியா ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் முதல் பந்திலேயே ஜேசன் ராயை வீழ்த்தினார். ஜேசன் ராயை கோல்டன் டக்காக்கிய ஸ்டார்க், அதற்கடுத்த பந்திலேயே ஜோ ரூட்டையும் வீழ்த்தினார்.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் நால்வரில்(கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரூட்) ஒருவராக அறியப்படும் ரூட், அண்மைக்காலமாக படுமோசமாக சொதப்பிவருகிறார். டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒருநாள் போட்டிகளிலும் சரிதொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். ஃபார்மில் இல்லாத அவர், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்பு ஒருநாள் தொடர் என எதிலுமே சரியாக ஆடவில்லை.

இந்த போட்டியிலும் கோல்டன் டக்காகி வெளியேறினார். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட நல்ல பேட்ஸ்மேனான ஜோ ரூட், அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க பண்படாமல், மோசமான ஃபார்மில் சொதப்புகிறார்.

ரன் கணக்கையே தொடங்காமல் 2 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனும் 23 ரன்களில் ஆடம் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி, 10.2 ஓவரில் 67 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடும் பேர்ஸ்டோவுடன் பட்லர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.