இங்கிலாந்து அணியில் 2002ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஆடிவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஏற்கனவே ஓய்வு அறிவித்துவிட்டு, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார்.

இங்கிலாந்து அணிக்காக 154 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 590 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலராக திகழ்கிறார் ஆண்டர்சன். ஃபாஸ்ட் பவுலர் நீண்டகாலத்திற்கு சர்வதேச கிரிக்கெட்டில் நீடிப்பது அரிதான காரியம். ஆனால் ஆண்டர்சன், தனது வேலைப்பளுவை குறைக்கும் விதமாக, சரியான நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதால், அவரால் ஃபிட்னெஸை பராமரித்து டெஸ்ட் போட்டிகளில் ஆட முடிகிறது. 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த போட்டியில் ஆண்டர்சன் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார். பிராட், வோக்ஸ், பெஸ், ஆர்ச்சர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்த, ஆண்டர்சன் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். 

இதையடுத்து ஆண்டர்சன், ஃபார்மில் இல்லை; வயதும் அதிகமாகிவிட்டதால் அவரது ஓய்வு குறித்து ஒரு டாக் ஓடியது. இந்நிலையில், அதுகுறித்து தெளிவுபடுத்தினார் ஆண்டர்சன். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக, லாக்டவுன் சமயத்தில், லாக்டவுனால் தனக்கு போதுமான ஓய்வு கிடைத்ததால், இன்னும் 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் ஆட தனது உடம்பு ஒத்துழைக்கும் என இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஓய்வு பெறும் ஐடியா இல்லை என்பதை ஆண்டர்சன் வெளிப்படுத்தியிருந்தார். குறைந்தது இன்னும் ஓராண்டாவது ஆடுவார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெறும் சூழல் இருந்தால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முடித்துவிட்டுத்தான் ஓய்வுபெறுவார். 

ஆனால் இதற்கிடையே, அவரது ஓய்வு குறித்த தகவல் பரவியது. இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், கண்டிப்பாக நான் இப்போது ஓய்வுபெறப்போவதில்லை. இன்னும் நிறைய கிரிக்கெட் ஆட வேண்டும்  என்ற வேட்கை என்னிடம் இருக்கிறது. ஒரு போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றதுமே, எனது ஓய்வு குறித்து பேசுவதுதான் செம கடுப்பாக இருக்கிறது. இது சரியில்லை.

நான் பவுலிங்கிலும் ரிதத்தில் இல்லை; பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக வீசவில்லை. எனவே தனிப்பட்ட முறையில் நான் விரக்தியில் இருந்தேன். கடந்த 10 ஆண்டுகளில், களத்தில் நான் உணர்ச்சிவசப்பட்டது இதுதான் முதல்முறையாக இருக்கும் என நினைக்கிறேன். களத்தில் உணர்ச்சிவசப்பட்டாலோ அதிருப்தியடைந்தாலோ, அது எந்தவிதத்திலும் களத்தில் நமக்கு உதவாது. 

அடுத்த போட்டிக்கு இன்னும் 2 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இந்த 2 நாளில் டெக்னிக்கலாக எதுவும் நான் சரிசெய்துகொள்ள வேண்டியிருந்தால், அதையெல்லாம் செய்துகொண்டு, அடுத்த போட்டியில் நான் யார் என்று காட்டுகிறேன் என்று ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி தொடங்குகிறது.