இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும் தென்னாப்பிரிக்க அணி 223 ரன்களும் அடித்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் சிப்ளி சிறப்பாக ஆடி சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக ஆடி 47 பந்தில் 72 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸின் அதிரடியால்தான் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

மொத்தமாக 437 முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 438 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மிகக்கடினமான இலக்குடன், நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 312 ரன்களும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகளும் தேவை. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை தனது 150வது போட்டியாக ஆடி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன், இரண்டாவது போட்டியில் வேறொரு சாதனையை படைத்துள்ளார். 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை 223 ரன்களில் சுருட்ட முக்கிய காரணமாக திகழ்ந்தார். இது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன், 28வது முறையாக ஒரு இன்னிங்ஸில் வீழ்த்திய 5 விக்கெட் ஆகும். இதன்மூலம் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை அதிகமாக வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 27 முறை வீழ்த்தி 7ம் இடத்தில் இருந்த இந்திய வீரர் அஷ்வினை பின்னுக்குத்தள்ளி 7ம் இடத்தை பிடித்துள்ளார் ஆண்டர்சன். 

இந்த பட்டியலில் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய லெஜண்ட் ஸ்பின்னர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இவரது சாதனையை இனி ஒருவர் முறியடிப்பது என்பது மிகக்கடினமான விஷயம்.