இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரில் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமநிலை அடைந்தது. தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கின. 

டெல்லியில் நேற்று நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜாவின் சதம் மற்றும் ஹேண்ட்ஸ்கம்பின் பொறுப்பான அரைசதத்தால் அந்த அணி 272 ரன்களை எடுத்தது. 

273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடரையும் 3-2 என வென்றது. 

கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது ஜடேஜாவின் செயல், கேப்டன் கோலி உட்பட அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. 34வது ஓவரை வீசிய ஜடேஜா, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மேக்ஸ்வெல்லை வீழ்த்தினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடுத்த பந்தை எதிர்கொண்டார். அந்த பந்து ஸ்டோய்னிஸின் பேட்டில் பட்டு கால்காப்பில் பட்டது. இதற்கு அனைத்து வீரர்களும் அப்பீல் செய்தனர். 

ஆனால் அம்பயர் அவுட்டில்லை என்று கூறியதும் அனைவரும் அமைதியாகிவிட்டனர். பேட்டில் பட்டதை அறிந்து அனைத்து வீரர்களும் அமைதியாக, ஆனால் விடாமல் தொடர்ந்து அம்பயரிடம் அப்பீல் செய்தார் ஜடேஜா. ஜடேஜாவின் இந்த செயலால் அடக்க முடியாமல் சிரித்தார். பின்னர் ஜடேஜாவிடம் சிரித்துக்கொண்டே விவரித்தார். அதன்பின்னர்தான் ஜடேஜா அமைதியானார்.