இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜாவின் அபாரமான ஃபீல்டிங்கால் ஆஸ்திரேலிய அணி இமாலய ஸ்கோரை எட்டமுடியாமல் போனது. 

ராஞ்சியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 193 ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஒரு வழியாக ஃபின்ச்சை 93 ரன்களில் வீழ்த்தி தொடக்க ஜோடியை பிரித்தார் குல்தீப் யாதவ். 93 ரன்களில் ஆட்டமிழந்த ஃபின்ச், சதத்தை தவறவிட்டார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆனால் சதத்திற்கு பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 104 ரன்களில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

கவாஜா ஆட்டமிழந்தாலும் மூன்றாம் வரிசையில் இறங்கிய மேக்ஸ்வெல், அடித்து ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல், ஜடேஜாவின் அபாரமான ஃபீல்டிங் மற்றும் தோனியின் சமயோசித விக்கெட் கீப்பிங்கால் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஷான் மார்ஷ் அடித்த பந்தை அபாரமாக ஃபீல்டிங் செய்து தடுத்த ஜடேஜா, பந்தை அவசரப்பட்டு வீசவில்லை. பவுலிங் முனையை ஷான் மார்ஷ் நெருங்கிவிட, பந்தை தோனியிடம் வீசினார். மேக்ஸ்வெல் வேகமாக ஓடிவந்த நிலையில், பந்தை பிடித்து அடிக்க நேரமில்லாததால் அப்படியே லாவகமாக அந்த பந்தை ஸ்டம்பில் தட்டிவிட்டார் தோனி. மேக்ஸ்வெல் ரன் அவுட்டாகி வெளியேறினார். அபாரமாக ஆடிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸை மிரட்டலான ரன் அவுட்டில் முடித்து வைத்தனர். 

அதன்பிறகு 44வது ஓவரை தனது கடைசி ஓவராக வீசிய குல்தீப், அந்த ஓவரில் ஷான் மார்ஷ் மற்றும் ஹேண்ட்ஸ்கம்ப் ஆகிய இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் குல்தீப். 33-34 ஓவரிலேயே 200 ரன்களை எட்டிவிட்ட ஆஸ்திரேலிய அணியை, மேக்ஸ்வெல்லின் விக்கெட்டுக்கு பிறகு கட்டுப்படுத்தினர் இந்திய பவுலர்கள்.

மேக்ஸ்வெல் ஆடிய வேகத்திற்கு, அதே வேகத்தில் சென்றிருந்தால் ஆஸ்திரேலிய அணி 340-350 ரன்களை குவித்திருக்கும். மேக்ஸ்வெல்லை ஜடேஜாவும் தோனியும் இணைந்து ரன் அவுட்டாக்கியதால் டெத் ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் குறைந்தது. பும்ராவும் ஷமியும் இணைந்து கடைசி 5 ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசினர். மார்கஸ் ஸ்டோய்னிஸும் அலெக்ஸ் கேரியும் சில பவுண்டரிகளை அடித்திருந்தாலும் அந்த அணி இமாலய ஸ்கோரை எட்டவில்லை. அந்த அணி 50 ஓவர் முடிவில் 313 ரன்களை எடுத்தது.