ஆசிஃப் அலியின் அபாரமான பேட்டிங் மற்றும் முகமது மூசாவின் சிறப்பான பவுலிங் ஆகியவற்றால் லாகூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இஸ்லாமாபாத் அணி.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் லாகூர் காலண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் அணி 20 ஓவரில் 152 ரன்கள் அடித்தது.
இஸ்லாமாபாத் அணி வீரர்கள் உஸ்மான் கவாஜா(0), காலின் முன்ரோ(4), ரொஹைல் நசீர்(1), ஹுசைன் டலட்(8), ஷதாப் கான்(5) ஆகிய 5 பேரும் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இஸ்லாமாபாத் அணி.
அதன்பின்னர் ஆசிஃப் அலியும் இஃப்டிகர் அகமதுவும் இணைந்து சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அரைசதம் அடித்த ஆசிஃப் அலி 43 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய இஃப்டிகர் அகமது 49 ரன்கள் அடித்தார்.

ஆசிஃப் அலியின் அதிரடி அரைசதம் மற்றும் இஃப்டிகரின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற படுமோசமான நிலையில் இருந்த இஸ்லாமாபாத் அணி, 20 ஓவர் முடிவில் 152 ரன்களை குவித்தது.
153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லாகூர் அணியில் தொடக்க வீரர்கள் ஃபகர் ஜமான் மற்றும் சொஹைல் அக்தர் ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். அவர்கள் இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஃபகர் ஜமான் 44 ரன்களும் அக்தர் 34 ரன்களும் அடித்தனர். அவர்கள் இருவரைத்தவிர அந்த அணியில் வேறு யாருமே சரியாக ஆடவில்லை.
அவர்களை தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால் 18.2 ஓவரில் 124 ரன்களுக்கே ஆல் அவுட்டானது லாகூர் அணி. இஸ்லாமாபாத் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய முகமது மூசா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இஸ்லாமாபாத் அணி.
