இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஆண்டிகுவாவில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை 222 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 343 ரன்கள் குவித்ததை அடுத்து 418 ரன்கள் முன்னிலை பெற்றது. 419 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பும்ராவும் இஷாந்த் சர்மாவும் இணைந்து 100 ரன்களுக்கு ஆல் அவுட் செய்துவிட்டனர். இந்த இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா, ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை கபில் தேவுடன் பகிர்ந்துகொண்டார். கபில் தேவ் ஆசியாவிற்கு வெளியே 155 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், அவரை சமன் செய்துள்ளார் இஷாந்த் சர்மா. அடுத்த போட்டியில் ஒரேயொரு விக்கெட் வீழ்த்தினாலே கபில் தேவை பின்னுக்குத்தள்ளிவிட்டு அனில் கும்ப்ளேவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்துவிடுவார் இஷாந்த் சர்மா.