இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 

ஆண்டிகுவாவில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் மயன்க் அகர்வால், புஜாரா, கோலி ஆகிய மூவரும் 25 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் ரஹானேவும் ராகுலும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ராகுல் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ரஹானே, 81 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பிறகு ஜடேஜா மட்டுமே சிறப்பாக ஆடி 58 ரன்களை அடித்தார். ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோர் பெரிதாக ஆடவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் காம்ப்பெல், க்ரைக் பிராத்வெயிட், ப்ரூக்ஸ், டேரன் பிராவோ ஆகியோர் கிடைத்த ஸ்டார்ட்டை பெரிதாக கன்வெர்ட் செய்யவில்லை. இவர்கள் எல்லாருமே குறைந்தது 5 ஓவருக்கு மேல் பேட்டிங் ஆடியும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. முதல் 4 விக்கெட்டுகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய இஷாந்த் சர்மா, அதன்பின்னர் வீழ்ந்த அனைத்து விக்கெட்டுகளையும் அவர்தான் வீழ்த்தினார். 

4 விக்கெட்டுக்கு பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்த ரோஸ்டான் சேஸ் - ஷாய் ஹோப் ஜோடியை இஷாந்த் சர்மா பிரித்தார். சேஸை 48 ரன்களில் வீழ்த்தி அரைசதம் அடிக்கவிடாமல் தடுத்தார். அதன்பின்னர் ஹோப், ஹெட்மயர், கீமார் ரோச் ஆகிய மூவரையும் இஷாந்த் சர்மா வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் ஹோல்டரும் கம்மின்ஸும் களத்தில் உள்ளனர். 

தொடக்கத்தில் இஷாந்த் சர்மாவின் பவுலிங் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் அவர் கடைசியாக வீசிய 3 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணியின் சார்பில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதுகுறித்து பேசிய இஷாந்த் சர்மா, மழைக்கு பின்னர் ஆடும்போது பந்து ஈரமாக இருந்ததால் எதுவுமே செய்யமுடியவில்லை. அப்போதுதான் க்ராஸ் சீமில் பந்துவீச திட்டமிட்டோம். பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. பும்ரா தான் க்ராஸ் சீம் முயற்சி செய்து பார்க்க சொன்னார். பும்ராவின் ஆலோசனையின்படி முயற்சி செய்தேன். அது நல்ல பலனளித்தது என்று இஷாந்த் சர்மா தெரிவித்தார்.