டி20 கிரிக்கெட்டில் தோனி, ரிஷப் பண்ட் ஆகியோர் கூட செய்யாத சாதனையை இஷான் கிஷன் செய்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே இஷான் கிஷன் தான் விக்கெட் கீப்பராக ஆடுகிறார். சஞ்சு சாம்சன் அணியில் இருந்தாலும் இஷான் கிஷன் தான் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கிய இஷான் கிஷன், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 56 பந்தில் 89 ரன்களை குவித்த இஷான் கிஷன், 11 ரன்னில் சதத்தை தவறவிட்டார். சதத்தை தவறவிட்டாலும், தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக செய்ய தவறியதை இலங்கைக்கு எதிராக செய்து தனது திறமையை நிரூபித்தார்.

இலங்கைக்கு எதிராக 89 ரன்கள் அடித்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார் இஷான் கிஷன். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் இஷான் கிஷன்.

தோனி 2017ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 56 ரன்கள் தான், டி20 கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர். ரிஷப் பண்ட் 2019ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிகபட்சமாக 65 ரன்கள் அடித்தார். தோனி, ரிஷப் ஆகிய இருவரும் பின்வரிசையில் இறங்குவதால் பெரிய ஸ்கோர் செய்யமுடியவில்லை. இஷான் கிஷன் ஓபனிங்கில் இறங்கியதால், இவ்வளவு சீக்கிரம், ஒரு விக்கெட் கீப்பராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துவிட்டார்.