விராட் கோலி களத்தில் நிலைத்த பின்னர், அதுவும் அவர் அரைசதம் அடித்த பின்னர் அவரை அவுட்டாக்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் களத்தில் நிலைத்துவிட்ட விராட் கோலிக்கே, ஏய்ப்பு காட்டி ஸ்டம்ப்பை கழட்டினார் நியூசிலாந்து ரிஸ்ட் ஸ்பின்னர் இஷ் சோதி. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதம், விராட் கோலியின் பொறுப்பான அரைசதம் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான பேட்டிங்கின் விளைவாக 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. 

அறிமுக வீரர்கள் பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தனர். பிரித்வி ஷா 20 ரன்களிலும் மயன்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த விராட் கோலி, உடனடியாக ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் ராகுலும் இணைந்து 30 ஓவருக்கு பிறகு அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஷ்ரேயாஸ் ஐயர், 103 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 பந்தில் 88 ரன்களை குவித்தார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. 

348 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் கோலி 51 ரன்களில் இஷ் சோதியின் பந்தில் கிளீன் போல்டானார். ரிஸ்ட் ஸ்பின்னை எதிர்கொள்வதில் கோலிக்கு சிக்கல் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக்கூட, ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவிடம் அதிகமாக விக்கெட்டை பறிகொடுத்தார் கோலி. அந்த தொடரின் போது, கோலி களத்திற்கு வந்த புதிதில் ரிஸ்ட் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுகிறார் என்று ஸாம்பா கூறியிருந்தார். 

ஆனால் களத்தில் நிலைத்த பின்னர் கோலியின் ஆட்டம் மிகத்தெளிவாக இருக்கும். அனைத்து ஷாட்டுகளையும் நேர்த்தியாக ஆடுவார். ஆனால் இன்றைய போட்டியில், கோலி மிகவும் அரிதாக அவுட்டாகும் ஒருமுறையில் ஆட்டமிழந்தார். இஷ் சோதியின் கூக்ளியை சரியாக கணிக்க முடியாமல், பந்தை விட்டார் கோலி. அது, கோலியின் பேட்டிக்கும் உடலுக்கும் இடையே புகுந்து ஸ்டம்பை கழட்டியது. அந்த வீடியோ இதோ.. 

via Gfycat