ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் 3 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வழக்கம்போலவே ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன. 

புள்ளி பட்டியலில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அபாரமாக ஆடிவருகிறார். மும்பை இந்தியன்ஸின் இன்னிங்ஸை சிறப்பாக முடித்துவைக்கும் ஃபினிஷர் வேலையை செவ்வனே செய்துவருகிறார். 

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளை தொடர்ந்து டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிராகவும் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி மிரட்டினார். பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பான பங்களிப்பு செய்யக்கூடியவர் ஹர்திக் பாண்டியா. 

ஐபிஎல்லில் திறமைகளை கண்டறிவதுதான் முக்கியமான விஷயம். அப்படி பல திறமைசாலிகளை கண்டறிந்து இந்திய அணிக்கு வழங்கியது, மும்பை இந்தியன்ஸ் அணி தான். ஹர்திக் பாண்டியா, பும்ரா என இரு சிறந்த வீரர்கள் இந்திய அணிக்கு கிடைக்க மும்பை இந்தியன்ஸ் அணிதான் காரணம். மும்பை அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் ஹர்திக் பாண்டியா 2015ம் ஆண்டிலிருந்து மும்பை அணிக்காக ஆடிவருகிறார். 

ஹர்திக் பாண்டியாவை 2013ம் ஆண்டே சன்ரைசர்ஸ் அணியில் எடுக்க, விவிஎஸ் லட்சுமணனிடம் பரிந்துரைத்துள்ளார் இர்ஃபான் பதான். ஆனால் அப்போது பரோடா அணிக்காக ஆடிவந்த ஹர்திக் பாண்டியா, சரியாக ஆடவில்லை. பரோடா அணியில் அவரது ரெக்கார்டுகள் நன்றாக இல்லாததால் ஹர்திக் பாண்டியாவை எடுக்க லட்சுமணன் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அதன்பிறகு ஹர்திக் பாண்டியாவின் திறமையறிந்து மும்பை இந்தியன்ஸ் அணி அவரை எடுத்தது. அதன்பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு. 

இந்த தகவலை இர்ஃபான் பதானும் லட்சுமணனுமே தெரிவித்துள்ளனர்.