விராட் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். தீராத வேட்கையுடன் ரன்களை குவித்துவரும் ரன் மெஷின் விராட் கோலி, இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசி, அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் 2 சதங்கள் அடித்தால், ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்திற்கு சென்றுவிடுவார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் அருமையாக ஆடி ரன்களை குவித்துவரும் விராட் கோலியின் பேட்டிங் சராசரி, மூன்றுவிதமான போட்டிகளிலுமே 50க்கும் அதிகம். விராட் கோலி அசுரத்தனமாக ஆடி ரோஹித் சர்மாவைப்போல ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதங்களை விளாசாவிட்டாலும், சீராக ஆடி ரன்களை குவித்துவருகிறார். பெரும்பாலும் அனைத்து போட்டிகளிலும் ஸ்கோர் செய்துவிடுகிறார். கோலி சொற்ப ரன்களில் அவுட்டாவது அரிதினும் அரிது. ஒரு சில போட்டிகளில் மட்டுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பார். 

அவர் அனைத்து போட்டிகளிலும் சீராக ரன்களை குவிப்பதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி. அதற்கு காரணம், அவர் சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதுதான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இர்ஃபான் பதானுடனான உரையாடலில், விராட் கோலியின் ஸ்டிரைக்கை ரொடேட் செய்யும் திறமை, ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், கெய்ல் போன்ற வீரர்களிடம் இல்லை. சிங்கிள்களை எடுத்து ஸ்டிரைக் ரொடேட் செய்து ஆடுவதுதான், ரோஹித், டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்களிடமிருந்து கோலியை ஒரு அடி உயர்த்தி பிடிக்கிறது. அதுதான் அவர் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக திகழ்வதற்குமான காரணம் என்றும் கம்பீர் தெரிவித்தார். 

அதற்கு பதிலளித்த இர்ஃபான் பதான், கோலி சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதால் தான் அவரை எதிரணி பவுலர்களால் அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியவில்லை என்று தெரிவித்தார். கோலியின் மிகப்பெரிய பலமே அதுதான். 

“விராட் கோலி தொடர்ச்சியாக சிங்கிள் எடுத்துவிட்டு பவுலிங் முனைக்கு சென்றுவிடுவதால், அவருக்கு எதிரான திட்டத்தை வகுப்பது, எதிரணி பவுலர்களுக்கு கஷ்டமாகிறது. கோலி ஸ்பெஷலான வீரர். சிங்கிள் ரொடேட் செய்வது மட்டுமல்ல; அவரது ரிஸ்ட் ஒர்க்கும் அருமையாக இருக்கும். அதனால் தான் சிறப்பாக வீசப்பட்ட பந்தைக்கூட அவர் தேர்டுமேன் திசையில் அடித்துவிட்டு சிங்கிள் எடுக்கிறார்” என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார். 

இர்ஃபான் பதான் சொன்ன இந்த காரணமும், கோலியை எதிரணி பவுலர்களால் எளிதாக வீழ்த்த முடியாததற்கான முக்கியமான காரணம் தான். விராட் கோலியின் சிங்கிள் அடித்து ஆடும் அணுகுமுறையை, அவராகவே கைவிட்டால்தான் உண்டு. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதால், அவர் கிரிக்கெட் ஆடும் வரை, அவரது விக்கெட்டை வீழ்த்துவது எதிரணி பவுலர்களுக்கு கஷ்டமான காரியம் தான்.