இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல பிக்பேஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

பாகிஸ்தானை தவிர மற்ற அனைத்து நாட்டு வீரர்களும் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்லில் ஆடுகின்றனர். ஆனால் அதேநேரத்தில் இந்திய வீரர்கள் மற்ற நாட்டு லீக் போட்டிகளில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. அதனால் இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடுவதில்லை. 

இந்நிலையில், இந்த ஆண்டு நடக்க இருக்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதானின் பெயர் இடம்பெற்றுள்ளது. கரீபியன் பிரீமியர் லீக்கில் 6 அணிகள் ஆடுகின்றன. அவற்றில் எந்த அணிக்காக இர்ஃபான் பதான் ஆடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், இதற்காக பிசிசிஐ-யிடமிருந்து தடையில்லா சான்று பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை. அந்த தகவலும் இல்லை. 

ஆனாலும் ஒரு இந்திய வீரரின் பெயர் வெளிநாட்டு லீக் தொடரின் ஏலத்திற்கான வரைவு பட்டியலில் இடம்பெற்றிருப்பதே இதுதான் முதன்முறை. பிசிசிஐ-யிடம் அனுமதி பெறாமல் இர்ஃபான் பதான் அப்ளை செய்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனாலும் அதுகுறித்த தகவல் தெரியவில்லை. 

இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் இர்ஃபான் பதான். 2003ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இர்ஃபான் பதான், 2012ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. ஐபிஎல்லில் பஞ்சாப், டெல்லி, சன்ரைசர்ஸ், சிஎஸ்கே, புனே, குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். 2017ம் ஆண்டுக்கு பிறகு இர்ஃபான் பதானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராததால் கடந்த 2 சீசன்களிலும் அவர் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.