இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். அறிமுகமான முதல் சில போட்டிகளில் தோனி சரியாக ஆடாத நிலையில், 2005ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டார் அப்போதைய கேப்டன் கங்குலி. அதுவரை மிடில் ஆர்டரில் இறங்கிய தோனி, பாகிஸ்தானுக்கு எதிரான அந்த குறிப்பிட்ட போட்டியில் மூன்றாம் வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடி சதமடித்தார். அந்த போட்டியில் 148 ரன்கள் அடித்த தோனி, அதன்பின்னர் இலங்கைக்கு எதிராக 183 ரன்களை குவித்தார். 

இவ்வாறு மூன்றாம் வரிசையில் சதங்களை குவித்துக்கொண்டிருந்த தோனி, கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு, அணியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, விராட் கோலியை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு, அவர் பின்வரிசையில் இறங்க ஆரம்பித்தார். அதன்பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக 6-7ம் வரிசைகளில் தான் ஆடிவருகிறார். அதிலும் சிறப்பாக செயல்பட்டு பெஸ்ட் ஃபினிஷர் என்று பெயர் பெற்றார் தோனி. ஆனால் அவரால் பெரியளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. 

தோனி 350 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி 50.53 என்ற சராசரியுடன் 10,773 ரன்களை குவித்துள்ளார். தோனியிடம் கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், தோனி தொடர்ச்சியாக மூன்றாம் வரிசையிலேயே பேட்டிங் ஆடி சரித்திரம் படைத்திருப்பார் என்றும் வேற லெவல் தோனியை கிரிக்கெட் உலகம் பார்த்திருக்கும் என்று இர்ஃபான் பதானுடனான உரையாடலில் கம்பீர் தெரிவித்தார். 

ஆனால் மூன்றாம் வரிசைக்கு தோனியை விட கோலி தான் சரியான வீரர் என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார். கம்பீரின் கருத்து குறித்த தனது பார்வையை தெரிவித்த இர்ஃபான் பதான், தோனி நினைத்திருந்தால், கண்டிப்பாக 3ம் வரிசையில் அவரே ஆடியிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அதேவேளையில், தோனியுடன் ஒப்பிட்டால், மூன்றாம் வரிசையில் ஆடுவதற்கு டெக்னிக்கின் அடிப்படையில் கோலி தான் சரியான வீரர் என்று உறுதியாக நம்புகிறேன். கிரிக்கெட்டில் தோனி லெஜண்ட் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மூன்றாம் வரிசையில் ஆட தோனியை விட கோலி தான் சரியான வீரர் என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.