இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல உலகம் முழுதும் பிக்பேஷ் லீக், மசான்ஸி சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்கதேச பிரீமியர் லீக், கனடா டி20 லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. 

ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மற்றபடி அனைத்து நாட்டு வீரர்களும் அனைத்து நாட்டு டி20 லீக் தொடர்களிலும் எந்தவிதமான தடையுமின்றி ஆடிவருகின்றனர். ஆனால் இந்திய வீரர்களுக்கு மட்டும் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. 

சர்வதேச கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகிய அனைத்திலிருந்தும் ஓய்வுபெற்ற வீரராக இருந்தால் வெளிநாட்டு டி20 லீக் தொடரில் ஆடலாம். அப்படித்தான் யுவராஜ் சிங் கடந்த கனடா பிரீமியர் லீக் தொடரில் ஆடினார். 

இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்த இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், லங்கா பிரீமியர் லீக்கில் ஆடப்போவதாக தகவல் வெளியானது. 

இலங்கையில் இந்த ஆண்டு முதல் முறையாக லங்கா பிரீமியர் லீக் தொடர் தொடங்கப்படவுள்ளது. வரும் 28ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை கொழும்பு, கண்டி, தம்புலா, கலி, யாழ்ப்பாணம் ஆகிய 5 அணிகள் கலந்துகொள்ளும் டி20 லீக் தொடர் நடக்கவுள்ளது.

இந்த தொடரில் இர்ஃபான் பதான், மார்டின் கப்டில் உள்ளிட்ட 70 வெளிநாட்டு வீரர்கள் ஆடப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் லங்கா பிரீமியர் லீக்கில் தான் ஆடப்போவதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும், ஆனால் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட ஆர்வமாக இருப்பதாகவும் இர்ஃபான் பதான் தெளிவுபடுத்தியுள்ளார்.