இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 329 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி அபார வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, இந்திய அணியின் 18 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளது. 

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என வென்றது. முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற அயர்லாந்து அணி சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 328 ரன்கள் அடித்தது. 329 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் மற்றும் கேப்டன் பல்பிர்னியின் அபாரமான சதத்தால் கடினமான இலக்கை எட்டி அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. 

ஸ்டர்லிங் 148 ரன்களையும் பல்பிர்னி 113 ரன்களையும் குவித்தனர். இவர்கள் இருவரின் பொறுப்பான மற்றும் அபாரமான பேட்டிங்கால் 329 ரன்கள் என்ற கடினமான இலக்கை அடித்து சாதனை படைத்தது. இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விரட்டப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுதான். இதற்கு முன் 2002 நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக சேஸ் செய்த 326 ரன்கள் தான், இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இந்திய அணியின் 18 ஆண்டுகால சாதனையை தகர்த்து, இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக மிகச்சிறந்த வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது அயர்லாந்து அணி.