ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. 

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 3 முறையும் கேகேஆர் அணி இரண்டு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. தோனி, ரோஹித் சர்மா, காம்பீர் ஆகிய மூவருமே ஐபிஎல்லில் வெற்றிகரமான கேப்டன்கள். காம்பீர் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், தோனியும் ரோஹித்தும் தொடர்ந்து கேப்டன்களாக இருந்துவருகின்றனர்.

மற்ற அணிகளில் கேப்டன்கள் மாறிக்கொண்டேயிருக்க, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்களாக தோனியும் ரோஹித்தும் நிரந்தர கேப்டன்களாக நீடித்துக்கொண்டிருக்கின்றனர். கோலியும் ஆர்சிபி அணியின் கேப்டனாக நிரந்தரமாக இருந்துவருகிறார். எனினும் அவர் வெற்றிகரமான கேப்டனாக இல்லை.

தோனி, ரோஹித், காம்பீர் ஆகிய மூவரும் தான் நீண்டகால கேப்டன்கள். அதிகமான போட்டிக்கு கேப்டன்சி செய்து அவர்களது அணிகளை வெற்றிகரமாக வழிநடத்தினர். ஐபிஎல் 12வது சீசன் நடந்துவரும் நிலையில், வெற்றி விகிதங்களின் அடிப்படையில் டாப் 10 வெற்றிகரமான கேப்டன்களின் பட்டியலில் தோனியை ஸ்மித்தும் வில்லியம்சனும் பின்னுக்கு தள்ளியுள்ளனர்.

ஸ்மித் 26 போட்டிகளில் கேப்டன்சி செய்து 17 வெற்றிகளுடன் 65.38% வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். வில்லியம்சன் 21 போட்டிகளில் கேப்டனாக இருந்து 13 வெற்றிகளுடன் 61.9% வெற்றி சராசரியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தோனி 169 போட்டிகளில் கேப்டன்சி செய்து 102 வெற்றிகளை பெற்று 60.71% வெற்றி சராசரியுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். 

இதுவெறும் நம்பரின் அடிப்படையிலானது. 20 போட்டிக்கு கேப்டன்சி செய்தவரின் வெற்றி விகிதத்தையும் 170 போட்டிக்கு கேப்டன்சி செய்தவரின் வெற்றி விகிதத்தையும் ஒப்பிட முடியாது. அதேபோல இந்த பட்டியலில் கவுதம் காம்பீர் 129 போட்டிகளில் கேப்டன்சி செய்து 71 வெற்றிகளை பெற்றுள்ளார். ரோஹித் சர்மா 98 போட்டிகளுக்கு கேப்டனக இருந்து 56 வெற்றிகளை பெற்றுள்ளார்.