ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் அடுத்த தலைமுறை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மீது ஆர்வம் காட்டிய ஐபிஎல் அணிகள், அவர்களை கோடிகளை அள்ளிக்கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளனர்.
ஐபிஎல் 2008ல் தொடங்கியதிலிருந்தே, வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்திருக்கிறது. ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எண்டர்டெய்னர்களாக இருந்திருக்கின்றனர். கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, ட்வைன் பிராவோ, ஆண்ட்ரே ரசல் ஆகிய வீரர்கள் ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த வீரர்களாகவும், எண்டர்டெய்னர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஐபிஎல்லின் வெற்றியில் இவர்களது பங்களிப்பும் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அதிரடியான பேட்டிங் ஐபிஎல்லை நோக்கி பல ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. அவர்களது காட்டடியை பார்ப்பதற்காகவே பலர் ஐபிஎல்லை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தளவிற்கு ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். இன்றளவும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய 2 சாம்பியன் அணிகளும் முறையே பொல்லார்டு மற்றும் பிராவோ என்ற இருபெரும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களை விட்டுக்கொடுப்பதில்லை. அதேபோல கேகேஆர் அணி ஆண்ட்ரே ரசலை விட்டுக்கொடுப்பதில்லை.
மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான சுனில் நரைன் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே கலக்கி கேகேஆர் அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக ஜொலித்துவருகிறார். இப்படியாக, முந்தைய தலைமுறை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அடுத்த தலைமுறை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் ஐபிஎல்லில் ஆதிக்கத்தை தொடங்கிவிட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மீதான மோகம் ஐபிஎல் அணிகளுக்கு குறையவில்லை. வெஸ்ட் இண்டீஸின் இளம் அதிரடி வீரர் நிகோலஸ் பூரனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.10.75 கோடிக்கு எடுத்தது. பூரன் மீது சில அணிகள் அதிக ஆர்வம் காட்டின. ஆனாலும் சன்ரைசர்ஸ் அணி விடாப்பிடியாக அவரை எடுத்தது.
ஆல்ரவுண்டரும் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் கேப்டனுமான ஜேசன் ஹோல்டரை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.8.75 கோடிக்கு எடுத்தது. அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிம்ரான் ஹெட்மயரை ரூ.8.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.
ஏலத்திற்கு முன்பாக நடந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடரில், 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் ஆடி இந்திய அணியை அச்சுறுத்திய, ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஒடீன் ஸ்மித்தை எடுக்க அணிகள் ஆர்வம் காட்டின. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மீது எப்போதுமே ஆர்வம் காட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒடீன் ஸ்மித்தை ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸின் மற்றொரு ஆல்ரவுண்டரான ரொமாரியோ ஷெஃபெர்டை சன்ரைசர்ஸ் அணி ரூ.7.75 கோடிக்கும், ஆல்ரவுண்டர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை ஆர்சிபி அணி ரூ.1 கோடிக்கும் எடுத்தன. பேட்ஸ்மேனான ரோவ்மன் பவல் ரூ.2.80 கோடிக்கு விலைபோனார்.
டி20 கிரிக்கெட்டில் லெஜண்ட் வீரரான ட்வைன் பிராவோவை ரூ.4.40 கோடிக்கு சிஎஸ்கே அணி மீண்டும் எடுத்தது. இவ்வாறாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மீது அதிக ஆர்வம் காட்டி அணிகள் ஏலத்தில் எடுத்தன.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மீது ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்ட காரணம், அவர்களில் பெரும்பாலானோர் அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டர்களாக திகழ்வதுதான். ஐபிஎல்லில் அசத்திய, இப்போது ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் அனைவரையும் பார்த்தால், ஒரு விஷயம் தெளிவாக புலப்படும். அது, அவர்கள் ஆல்ரவுண்டர்கள் என்பதுதான்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களாக திகழும் பொல்லார்டு, பிராவோ, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் ஆகிய அனைத்து வீரர்களும் ஆல்ரவுண்டர்கள். இப்போது ஏலத்தில் ஐபிஎல் அணிகளால் ஆர்வத்துடன் எடுக்கப்பட்டுள்ள ஜேசன் ஹோல்டர், ஒடீன் ஸ்மித், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு ஆகிய அனைவருமே ஆல்ரவுண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
