ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக லக்னோ அணி 227 ரன்கள் குவித்தது. கேப்டன் ரிஷப் பந்த் சதம் அடித்து அசத்தினார். மார்ஷ் 67 ரன்கள் எடுத்தார்.
2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 228 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. லக்னோ அணியின் அறிமுக வீரர் மேத்யூ பெட்ஸ்கீ 14 ரன்களில் ஆடமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பந்த் மற்றொரு தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் உடன் இணைந்து ஆர்சிபி பந்துவீச்சைச் சிதறடிக்கத் தொடங்கினர்.
மார்ஷ் 67 ரன்கள் (37 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். மற்றொரு பக்கம் பெங்களூரு அணியின் எல்லா பவுலர்களையும் அடித்து நொறுக்கிய ரிஷப் பந்த் சதம் அடித்து அசத்தினார். கடைசி வரை நிலைத்து நின்ற அவர் 61 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய அப்துல் சமத் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
20 ஓவர்களில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 227 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது. சில போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி ஆர்சிபி அணிக்கு வெற்றி தேடித் தந்த டிம் டேவிட் இந்த போட்டியில் விளையாடவில்லை என்பது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக உள்ளது. அவருக்குப் பதிலாக லியம் லிவிங்ஸ்டன் அணியில் இடம்பிடித்துள்ளார்.
