ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குகின்றன. எனவே இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்த சீசனுக்கான மெகா ஏலம் முடிந்துவிட்ட நிலையில், இந்த சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடங்கும் என்று தெரிந்தது. ஆனால் தேதி தெரியாமல் இருந்தது. மார்ச் 27ம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் ஐபிஎல்லை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல், சனிக்கிழமை(மார்ச் 26) தொடங்கினால், சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் ரேட்டிங் நன்றாக வரும் என்பதால், மார்ச் 26ம் தேதி ஐபிஎல்லை தொடங்கவேண்டும் என்று பிசிசிஐயிடம் ஸ்டார் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த கோரிக்கையை ஏற்று மார்ச் 26ம் தேதி ஐபிஎல் தொடங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
லீக் போட்டிகள் மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் புனேவில் நடக்கவுள்ள நிலையில், மகாராஷ்டிரா அரசு அனுமதியுடன் 25 அல்லது 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. மகாராஷ்டிரா அரசு அனுமதி கொடுப்பதை பொறுத்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
