ஆர்சிபி அணியின் புதிய அணியின் புதிய கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். 

ஐபிஎல்லில் 2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, வரப்போகும் 15வது சீசனுக்கு முன்பாக கேப்டன்சியிலிருந்து விலகினார். இதையடுத்து புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆர்சிபி அணி, ஏலத்திற்கு முன்பாக கேப்டன்சிக்கு தகுதியான வீரரான க்ளென் மேக்ஸ்வெல்லை தக்கவைத்தது.மெகா ஏலத்திலும் கேப்டன்சிக்கு தகுதியான டுப்ளெசிஸையும் எடுத்தது.

ஆர்சிபி அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டால் டுப்ளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பில்லை. க்ளென் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்படலாம். ஆனால் விராட் கோலியிடமே மீண்டும் கேப்டன்சியை ஏற்றுக்கொள்ளுமாறு ஆர்சிபி அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், க்ளென் மேக்ஸ்வெல்லிடம் கேப்டன்சி பொறுப்பை கொடுத்தால் ஐபிஎல்லில் வேற லெவல் மேக்ஸ்வெல்லை பார்க்கலாம் என நினைக்கிறேன். கடந்த சீசனில் அபாரமாக ஆடினார். ஒருவேளை மெகா ஏலத்தில் தன்னை ஆர்சிபி அணி தக்கவைக்க வேண்டும் என்பதற்காகக்கூட அவர் நன்றாக ஆடியிருக்கலாம். ஆனால் அவரது அபாரமான சீசனுக்கு பிறகு அவர் ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்பட்டார்.

சில வீரர்கள் 30-40 ரன்களை விரைவில் அடித்துவிடுவார்கள். ஆனால் அணிக்கு இன்னும் 70-80 ரன்கல் தேவைப்படும் நிலையில், அணிக்கு தேவையானதை முழுமையாக செய்துகொடுக்காமல் ஆட்டமிழந்துவிடுவார்கள். ஆனால் அதே வீரர்களிடம் கேப்டன்சியை கொடுத்தால், அவர்களது ஷாட் செலக்‌ஷன் சிறப்பாக இருக்கும். எனவே அந்தவகையில், மேக்ஸ்வெல்லை கேப்டனாக நியமித்தால், அவர் இன்னும் சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி:

தக்கவைத்த வீரர்கள்: விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ்

ஏலத்தில் எடுத்த வீரர்கள்: டுப்ளெசிஸ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராஜ்வாட், ஷபாஷ் அகமது, ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், மஹிபால் லோம்ரார், ஃபின் ஆலன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப், சுயாஷ் பிரபுதேசாய், சாமா மிலிண்ட், அனீஷ்வர் கௌதம், கரன் ஷர்மா, சித்தார்த் கௌல், லுவினித் சிசோடியா, டேவிட் வில்லி.