ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணி ஏலத்திற்கு முன்பாக எந்த 3 வீரர்களை எடுக்கிறது என்று பார்ப்போம். 

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன.

எனவே அடுத்த சீசனிலிருந்து ஐபிஎல்லில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.

அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு (அதிகபட்சம் 4 வீரர்கள்) மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஏலத்திற்கு முன்பாக 2 புதிய அணிகளும் தலா 3 வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ரஷீத் கான், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல சிறந்த வீரர்கள் அவர்கள் சார்ந்த அணிகளால் விடுவிக்கப்பட்டதால், 2 புதிய அணிகளுக்கும் நல்ல வீரர்களை எடுப்பதற்கான வாய்ப்புள்ளது.

அந்தவகையில், அகமதாபாத் அணி, ஷ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய 3 பெரிய வீரர்களையும் ஏலத்திற்கு முன்பாக எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி கேபிடள்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்திவந்த ஷ்ரேயாஸ் ஐயர், தோள்பட்டை காயத்தால் 14வது சீசனின் முதல் பாதியில் ஆடவில்லை. அதனால் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட்டே, தொடர்ந்து கேப்டனாக நீடிக்க, கேப்டன்சியிலிருந்து மொத்தமாக நீக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியிலிருந்து வெளியேறினார். எனவே ஷ்ரேயாஸ் ஐயரை வாங்கி அவரையே கேப்டனாக நியமிக்கும் முனைப்பில் அகமதாபாத் அணி உள்ளது.

2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னர், கடந்த சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது மட்டுமல்லாது, ஆடும் லெவனில் கூட இடமளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டார். எனவே அந்த அணியில் இருந்து வெளியேறிய வார்னரை, அகமதாபாத் அணி வாங்கவுள்ளது.

அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட ஆல்ரவுண்டரும், ஃபினிஷருமான ஹர்திக் பாண்டியாவையும் அகமதாபாத் அணி எடுக்கவுள்ளதாக தெரிகிறது.