ஐபிஎல் 15வது சீசன் லீக் போட்டிகள் 6 மைதானங்களில் நடக்கவுள்ளன.
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில், 15வது சீசன் வரும் மார்ச் 27 முதல் மே 28ம் தேதி வரை நடக்கவுள்ளது.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் இணைவதால் ஐபிஎல் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
கடந்த 2 சீசன்களும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டதால் இந்த சீசனை இந்தியாவில் நடத்தியே தீரவேண்டும் என்ற உறுதியில் இருந்த பிசிசிஐ, மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் 5 மைதானங்களில் அனைத்து லீக் போட்டிகளையும் நடத்தி முடித்துவிட திட்டமிட்டது.
ஆனால் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கருத்தில்கொண்டே குஜராத் டைட்டன்ஸ் அணி உருவாக்கப்பட்டது. எனவே அந்த ஸ்டேடியத்திலும் சில போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது.
எனவே ஐபிஎல் 15வது சீசனுக்கான லீக் போட்டிகள் 6 மைதானங்களில் நடத்தப்படும் என தெரிகிறது. மும்பையில் வான்கடே ஸ்டேடியம், ப்ராபோர்ன் ஸ்டேடியம், டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம், ஜியோ ஸ்டேடியம், புனே மற்றும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆகிய 6 ஸ்டேடியங்களில் ஐபிஎல் லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
