ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு பின் எந்த அணி வலுவான அணியாக இருக்கிறது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடந்தன. ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை மற்ற வீரர்களுடன் போட்டி போட்டு எடுத்தன.
சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், முதல் ஐபிஎல் கோப்பையை எதிர்நோக்கும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் நல்ல வீரர்களை எடுத்து வலுவான அணிகளை கட்டமைத்துள்ளன.
ஏற்கனவே 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ஜோஃப்ரா ஆர்ச்சர், டைமர் மில்ஸ், டிம் டேவிட், இஷான் கிஷன், டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன் ஆகிய வீரர்களை எடுத்துள்ளது. ஏற்கனவே ரோஹித், சூர்யகுமார், பொல்லார்டு, பும்ரா ஆகிய வீரர்களை தக்கவைத்த நிலையில், ஏலத்திலும் தரமான வீரர்களை எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணியும் டெவான் கான்வே, கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே ஆகியோருடன் பழைய வீரர்களான தீபக் சாஹர், பிராவோ, ராயுடு, உத்தப்பா ஆகிய வீரர்களையும் எடுத்துள்ளது.
கேகேஆர் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் புதிய அணியை கட்டமைக்கிறது. ரசல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்களை தக்கவைத்திருந்த நிலையில், பாட் கம்மின்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், சாம் பில்லிங்ஸ், டிம் சௌதி, முகமது நபி, சாமிகா கருணரத்னே ஆகிய வெளிநாட்டு வீரர்களையும், நிதிஷ் ராணா, பாபா இந்திரஜித், உமேஷ் யாதவ் ஆகிய இந்திய வீரர்களையும் எடுத்துள்ளது.
இந்த சீசனில் புதிதாக களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையை 2 முறை வென்ற கேகேஆர் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீரை ஆலோசகராக நியமித்திருக்கும் நிலையில், ஏலத்தில் கேஎல் ராகுல் தலைமையில் வலுவான அணியை கட்டமைத்திருக்கிறது. மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய ஆல்ரவுண்டர்களை எடுத்து, ஆல்ரவுண்டர்கள் நிறைந்த வலுவான அணியாக கட்டமைத்திருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெரிய பெரிய வீரர்களை எடுத்திருக்கிறது. அந்த அணியும் பேப்பர் அளவில் வலுவான அணியாக உள்ளது.
இப்படியாக பல அணிகள் வலுவாக திகழும் நிலையில், ரசிகர் ஒருவர், ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு பின் எந்த அணி வலுவான அணியாக திகழ்கிறது என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சிஎஸ்கேவாகத்தான் இருக்கவேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பதிலை கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
