அக்டோபர் மாதம் 18ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த டி20 உலக கோப்பை தொடர் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், ஐபிஎல் 13வது சீசன் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடைபெறும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. 

எனவே ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில் ஐபிஎல்லை நடத்துவது குறித்த பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. 

அதன்பின்னர் ஐபிஎல் குறித்து பேசிய பிசிசிஐ தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி, ஐபிஎல் போட்டிகள் வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை அரைமணி நேரம் முன்னதாகவே 7.30 மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். 

செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் தொடங்கும் நிலையில், வழக்கமாக இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் என்பதால், நவம்பர் 8ம் தேதி இறுதி போட்டி நடக்கலாம் என்று உத்தேச தேதி வெளியிடப்பட்ட நிலையில், இறுதி போட்டி நவம்பர் 10ம் தேதி நடக்கும் என அந்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். ஐபிஎல் இறுதி போட்டி இதுவரை வார இறுதி விடுமுறை நாட்களில் தான் நடந்துள்ளது. முதல் முறையாக இந்த முறை தான் வார நாட்களில் இறுதி போட்டி நடக்கவுள்ளது. 

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் போட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.