Asianet News TamilAsianet News Tamil

கனேரியா விவகாரம்.. மௌனம் கலைத்த இன்சமாம் உல் ஹக்.. கம்பீருக்கு பதிலடி

தான் ஒரு இந்து என்பதால் பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலர் தன்னை ஒதுக்கியதாகவும் தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டதாகவும் கனேரியா கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். 
 

inzamam ul haq speaks about danish kaneria religion discrimination statement
Author
Pakistan, First Published Dec 29, 2019, 5:23 PM IST

அனில் தல்பாட்டுக்கு அடுத்து பாகிஸ்தான் அணியில் ஆடிய இரண்டாவது இந்து வீரர் டேனிஷ் கனேரியா தான். கனேரியா 2000ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடினார். 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கனேரியாவுடன் ஆடிய அவரது சக வீரருமான ஷோயப் அக்தர், சில உண்மைகளை வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய அக்தர், எனது கெரியரில், பிராந்திய ரீதியான பிரிவினையை தூண்டும் விதமாக பேசும் 2-3 வீரர்களுடன் சண்டை போட்டிருக்கிறேன். கராச்சி, பஞ்சாப், பெஷாவர் என, அணிக்குள் பிராந்திய ரீதியான பாகுபாட்டை திணித்து சீற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுவார்கள். அவர்களுடன் நான் சண்டை போட்டிருக்கிறேன். ஒருவர் இந்து மதத்தை சேர்ந்த வீரராக இருந்தால், அதனால் என்ன..? அவர் சிறப்பாக ஆடி அணிக்காக நல்ல பங்களிப்பு செய்வதுதான் முக்கியம். 

inzamam ul haq speaks about danish kaneria religion discrimination statement

ஆனால் அவரை இந்து என்பதற்காக சில வீரர்கள் ஒதுக்கினர். டேபிளில் இருந்து நீ எப்படி சாப்பாட்டை எடுக்கலாம்? என்று கேட்பார்கள். அவருடன் இணைந்து சாப்பிடக்கூட மாட்டார்கள். ஆனால், இதே இந்து வீரர் தான் இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட்டுகளை வாரிக்குவித்தார். அவரது அபாரமான பவுலிங்கால்தான் பாகிஸ்தான் அணி தொடரையே வென்றது. கனேரியா இல்லாமல் அந்த தொடரை வென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கான கிரெடிட்டை கூட அவருக்கு சக வீரர்கள் கொடுக்கவில்லை என்று உண்மையை உரக்க சொன்னார் அக்தர். 

inzamam ul haq speaks about danish kaneria religion discrimination statement

இதுவரை தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேசாமல் இருந்த கனேரியா, அக்தரின் கருத்துக்கு பிறகு தைரியத்துடன் பேசினார். பாகிஸ்தான் அணியில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேசிய கனேரியா, ஷோயப் அக்தர் ஒரு லெஜண்ட். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றுமே உண்மை. நான் ஆடிய காலத்தில் இதுகுறித்தெல்லாம் பேசுவதற்கு எனக்கு தைரியமில்லை. ஆனால் அக்தர் பேசியதால், நானும் பேசுகிறேன். அக்தர் எப்போதுமே எனக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். அதேபோல இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுஃப் ஆகிய வீரர்களும் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்திருக்கின்றனர். நான் இந்து என்பதால் என்னிடம் சரியாக பழகாமல், ஒதுக்கிவைத்த வீரர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று தெரிவித்தார். 

inzamam ul haq speaks about danish kaneria religion discrimination statement

மேலும் அதன்பின்னர் வெளியிட்ட அறிக்கையில், தனது வாழ்க்கை மிகவும் மோசமாக இருப்பதாகவும், கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன்; எனவே கஷ்டத்தில் இருக்கும் எனக்கு உதவ வேண்டும் என பிரதமர் இம்ரான் கான் உட்பட அனைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ஸ்பாட் ஃபிக்ஸிங் சர்ச்சையில் சிக்கிய கனேரியாவிற்கு 2012ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

inzamam ul haq speaks about danish kaneria religion discrimination statement

இதையடுத்து கனேரியா விவகாரம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர், இதுதான் பாகிஸ்தானின் உண்மையான முகம். இந்திய அணிக்கு முகமது அசாருதீன் கேப்டனாக இருந்துள்ளார். 80-90 டெஸ்ட் போட்டிகளுக்கு அசாருதீன் கேப்டன்சி செய்துள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் தான் பாகிஸ்தானின் பிரதமராக இருக்கிறார். இருந்தும் அவர்களின் மனநிலை இவ்வளவுதான். இதுதான் பாகிஸ்தானின் உண்மை முகம். கனேரியா பாகிஸ்தான் அணிக்காக 60(61) டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அப்படிப்பட்ட வீரர் மீதான ஒடுக்குமுறைகள் வெட்கக்கேடானவை என்று கடுமையாக விமர்சித்திருந்தார் கம்பீர். 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கம்பீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்சமாம் உல் ஹக் பேசியுள்ளார். கனேரியா ஆடிய காலத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த இன்சமாம் உல் ஹக் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய இன்சமாம், கிரிக்கெட்டில் ஒருபோதும் மதம் கலக்கவில்லை. என்னுடைய தலைமையின் கீழ் கனேரியா நீண்டகாலம் ஆடியுள்ளார். என்னுடைய கேப்டன்சியில் ஆடிய காலத்தில் அவருக்கு அப்படி நடந்திருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் சாக்லைன் முஷ்டாக்கைவிட கனேரியாவிற்கு முன்னுரிமை கொடுத்து, நானும் அணி தேர்வாளர்களும் அவரை அணியில் எடுத்துள்ளோம். கனேரியா எதிர்காலத்தின் சிறந்த ஸ்பின்னராக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரை அணியில் எடுத்தோம். 

inzamam ul haq speaks about danish kaneria religion discrimination statement

மதத்தின் அடிப்படையில் அவர் மீது பாகுபாடு காட்டப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை. யூசுஃப் யோகானா(முகமது யூசுஃப்) முஸ்லீம் இல்லை. ஆனால் அவர் பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். அவர் முஸ்லீம் இல்லை என்பதற்காக அவர் மீது பாரபட்சம் காட்டியிருந்தால், அவர் பிற்காலத்தில் முஸ்லீம் மதத்திற்கு மாறியிருக்கவே மாட்டார். அவர் மீது பாரபட்சம் காட்டப்படாததால்தான் அவர் பின்நாளில் முஸ்லீம் மதத்திற்கு மாறி தனது பெயரையும் முகமது யூசுஃப் என மாற்றிக்கொண்டார். 

inzamam ul haq speaks about danish kaneria religion discrimination statement

கிரிக்கெட்டில் மதம் இல்லை, மதம் கலக்கவும் இல்லை. பாகிஸ்தான் மக்களின் மனநிலை இவ்வளவுதான் என்று சிலர் மட்டம்தட்டும் வகையில் பேசியிருக்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. பாகிஸ்தான் மக்கள் உண்மையாகவே, மதம் கடந்து அனைவரையும் அன்புடன் வரவேற்கக்கூடியவர்கள்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நிறைய அன்பு இருக்கிறது. இந்திய அணி, 15 ஆண்டுகளுக்கு பிறகு 2004ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்தபோது, பாகிஸ்தான் மக்கள் இந்திய வீரர்களை மனமுவந்து வரவேற்றனர். இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டனர், கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கினர். அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்த பாகிஸ்தான் மக்கள், அவர்களிடம் காசு கூட வாங்கவில்லை. ஆனால் அன்பை வாரி வழங்கினர். 

inzamam ul haq speaks about danish kaneria religion discrimination statement

அதேபோல, நாங்கள் 2005ம் ஆண்டு இந்தியாவிற்கு சென்றபோது, இந்திய மக்கள் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்தனர். நாங்கள் வெளியில் சென்றபோது எந்த கடைகளிலும் எங்களிடம் காசு வாங்கவில்லை. அந்த சுற்றுப்பயணத்தின்போது, கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் ரெஸ்டாரண்ட்டை நானும் சச்சினும் இணைந்துதான் தொடங்கிவைத்தோம். கங்குலி அளித்த உணவை நான் சாப்பிட்டிருக்கிறேன். அப்படியிருக்கையில், கனேரியாவுடன் உணவை பகிராமல் எப்படி இருந்திருக்க முடியும். எனவே எனது கேப்டன்சியில் அப்படியான பாகுபாடு காட்டப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை என்று முற்றிலுமாக மறுத்திருக்கிறார் இன்சமாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios