2019 உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று பெரும்பாலான ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் வலுவாக உள்ளன. இங்கிலாந்தில் நடந்த 2009 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை பாகிஸ்தான் அணி வென்றதால், இங்கிலாந்தில் நன்றாக ஆடிவரும் பாகிஸ்தான் அணியும் சிறந்த அணியாக பார்க்கப்பட்டது. 

ஆனால் உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியிருப்பது பாகிஸ்தான் அணியை நிலைகுலைய செய்துள்ளது. 340 ரன்களுக்கு மேல் குவித்தும் கூட பாகிஸ்தான் அணியால் சில போட்டிகளில் வெல்ல முடியவில்லை. எதிரணியான இங்கிலாந்தை போட்டிக்கு போட்டி 350 ரன்களுக்கு மேல் குவிக்கவிட்டது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலிங்கும் ஃபீல்டிங்கும் மோசமாக இருக்கிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் அடிப்படையில், உலக கோப்பை அணியில் 3 மாற்றங்களை செய்தது பாகிஸ்தான் அணி. அபித் அலிக்கு பதிலாக ஆசிஃப் அலியும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு பதிலாக முகமது அமீரும் ஜுனைத் கானுக்கு பதிலாக வஹாப் ரியாஸும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து விளக்கமளித்த பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், வஹாப் ரியாஸ் அனுபவம் வாய்ந்த பவுலர். பழைய பந்திலும் நன்றாக வீசக்கூடியவர், ரிவர்ஸ் ஸ்விங்கும் அருமையாக வீசுவார். பாகிஸ்தான் பவுலர்கள் அனுபவம் குறைந்தவர்களாக இருப்பதால், அணியில் ஒரு சீனியர் அனுபவ பவுலர் தேவை என்பதால் வஹாப் ரியாஸ் அணியில் எடுக்கப்பட்டாரே தவிர. பயந்து போய் அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரின் கருத்தை கேட்டு அவர்களின் தேவைக்கேற்ப அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார். 

மேலும் இங்கிலாந்து கண்டிஷனில் நல்ல வேகமாக வீசக்கூடிய மற்றும் இங்கிலாந்தில் வீசிய அனுபவம் கொண்ட வீரராக இருப்பது நல்லது. அந்த வகையில், ஃபஹீம் அஷ்ரஃபும் ஜுனைத் கானும் நன்றாக வீசினாலும் அவர்களின் பவுலிங் இங்கிலாந்தில் எடுபடவில்லை. எனவே இங்கிலாந்தில் அதிகமாக பந்துவீசிய அனுபவம் கொண்ட முகமது அமீர் அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்று இன்சமாம் தெரிவித்தார்.