இமாம் உல் ஹக்கை தனது உறவினர் என்பதற்காகவே இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் எடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளார் இன்சமாம் உல் ஹக்.

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் தான் காரணம். பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் பெரும்பாலும் சிறப்பாகவே செயல்பட்டனர். ஆனால் பேட்ஸ்மேன்கள் தான், இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சரியாக ஆடாமல் சொதப்பினர். பேட்டிங் சரியாக இல்லாததுதான் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. 

உலக கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சதமடித்தார். பாகிஸ்தான் அணியும் அந்த போட்டியில் வென்றது. ஆனாலும் அந்த சதத்தால் பயனில்லை என்பதோடு அந்த சதமடிக்கப்பட்ட விதம் திருப்தியளிக்காததால், அந்த சதத்தை நான் குப்பையில் தான் போடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீரர் அகமது காட்டமாக தெரிவித்திருந்தார். 

இன்சமாம் உல் ஹக்கின் உறவினர் என்பதாலேயே இமாம் அணியில் எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியதோடு, அவர் சரியாக ஆடாவிட்டாலும், இமாம் உல் ஹக்கின் ஆட்டத்தை வக்கார் யூனிஸ் போன்றவர்கள் விமர்சிக்க மாட்டார்கள். ஏனெனில் இமாமின் மாமா இன்சமாம் உல் ஹக்குடனான அவர்களது உறவை பேணிக்காக்கும் நோக்கில் இமாம் உல் ஹக்கை விமர்சிக்கமாட்டார்கள் என்று வெளிப்படையாக தெரிவித்தார். 

தன்வீர் அகமதுவின் குற்றச்சாட்டு சலசலப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக பதவிவகித்து வரும் இன்சமாமின் பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தனது பதவிக்காலம் முடிந்ததும் அந்த பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் மீண்டும் அந்த பதவியில் தொடரமாட்டேன் என்பதை உறுதியாகவும் தெரிவித்துவிட்ட இன்சமாம் உல் ஹக், இமாம் உல் ஹக் தேர்வு குறித்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளார். 

இமாம் உல் ஹக்கின் தேர்வு குறித்து பேசிய இன்சமாம் உல் ஹக், இமாம் உல் ஹக்கை நான் தேர்வு செய்யவில்லை. அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிராண்ட் ஃபிளவர் தான் இமாம் உல் ஹக்கின் ஆட்டத்தை பார்த்துவிட்டு, இளம் வீரரின் இருப்பு அணிக்கு வலுசேர்க்கும் என்று அவரை எடுக்கலாம் என்ற ஆலோசனையை வழங்கினார். அப்போதும் கூட இமாம் உல் ஹக்கை அணியில் சேர்ப்பது குறித்த ஆலோனையின்போது மற்றவர்கள் முடிவெடுக்கட்டும் என்று நான் அமைதையாகத்தான் இருந்தேன். ஒரு வீரரை அணியில் சேர்ப்பது என்பது எனது தனிப்பட்ட முடிவல்ல. பயிற்சியாளர்கள், கேப்டன் என அனைவருடனான ஆலோசனையின்படி ஒருமித்தமான முடிவு. அதனால் என் மீது குற்றம்சாட்ட முடியாது. அதுமட்டுமல்லாமல் இமாமை நான் எடுக்கவேயில்லை என்று இன்சமாம் தெரிவித்தார்.