இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி, முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் அடிக்க, இந்திய அணி 336 ரன்கள் அடித்தது.

33 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி 294 ரன்களுக்கு சுருண்ட நிலையில் மொத்தமாக 327 ரன்கள் முன்னிலை பெற்றது. 328 ரன்கள் என்ற இலக்கை விரட்ட இந்திய அணி தொடங்கிய 2வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டதால், 4ம் நாள் ஆட்டத்தில் 30 ஓவருக்கும் மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

கடைசி நாளான நாளைய(ஜனவரி 19) ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 324 ரன்கள் தேவைப்படும் நிலையில், மிட்செல் ஸ்டார்க் 2வது இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசும்போது தொடைப்பகுதியில் காயமடைந்தார். வலியில் தொடையை பிடித்தார் ஸ்டார்க். அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிருப்பதால், கடைசி நாள் ஆட்டத்தில் பந்துவீசுவது சிரமம். பெரும்பாலும் பந்துவீச மாட்டார் என்றே தெரிகிறது.

ஒருவேளை ஸ்டார்க் பந்துவீசவில்லை என்றால், அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்; வெற்றிக்கும் வழிவகுக்கும். ஆனால், இதுமாதிரி ஸ்டார்க் காயமடைந்த சில போட்டிகளில், கடைசி நேரத்தில், வலியை பொறுத்துக்கொண்டு பந்துவீசி தனது பணியை அணிக்காக செவ்வனே செய்துகொடுத்துள்ளார் என்றும் அதனால் கடைசி நாள் ஆட்டத்தில் ஸ்டார்க் பந்துவீசுவார் என்றும் ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.