இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பவுலர்களை நியமிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் எடுத்துரைத்துள்ளார். 

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார்.

இதையடுத்து யார் அடுத்த கேப்டன் என்ற விவாதம் பரபரப்பாக நடந்துவருகிறது. வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளார்.

ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் என பல பெயர்கள் கேப்டன்சிக்கு முன்னாள் வீரர்கள் பரிந்துரைத்துவருகின்றனர். பேட்ஸ்மேன்கள் தான் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டுமா? பவுலர்கள் நியமிக்கப்படக்கூடாதா என்ன? என்ற கேள்வியுடன் ஜஸ்ப்ரித் பும்ராவின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் ஃபாஸ்ட் பவுலர் அல்லது ஸ்பின் பவுலர் என எந்தவிதமான பவுலரையும் கேப்டனாக நியமிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்பதை இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

அஷ்வின், பும்ராவின் பெயர்கள் கேப்டன்சி விவகாரத்தில் அடிபடும் நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பரத் அருண், அஷ்வினை கேப்டனாக நியமிப்பதில் சிக்கல் உள்ளது. அணி காம்பினேஷனை மாற்றுவதாக இருந்தால், சில நேரங்களில் ஜடேஜா மட்டுமே ஸ்பின்னராக ஆடுவார். அப்படியான நேரத்தில் அஷ்வின் எப்படி கேப்டனாக செயல்படமுடியும்? அணியின் வியூகங்களின் அடிப்படையில் அஷ்வின் ஆடும் லெவனில் இடம்பெறுவது சந்தேகமாகும். எனவே அஷ்வினை நியமிக்க முடியாது.

அதேபோல பும்ராவையும் நியமிக்க முடியாது. பும்ராவிற்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுப்பதென்றால், அதற்காக வேறு யாரையுமா கேப்டனாக நியமிக்க முடியும்? எனவே தொடரின் இடையே கேப்டனை மாற்ற முடியாது என்பதால் அவரையும் கேப்டனாக நியமிக்க முடியாது என்று பரத் அருண் தெரிவித்துள்ளார்.