நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. 
 
ரோஹித் சர்மா காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அதனால் மயன்க் அகர்வாலுடன் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஏனெனில் பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள் மட்டுமல்லாது, இருவருமே நல்ல ஃபார்மிலும் உள்ளனர். அதனால் இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

ஆனால் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இருவருமே டக் அவுட்டாகினர். அதேநேரத்தில், ஹனுமா விஹாரி சிறப்பாக ஆடி சதமடித்தார். 101 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனாரே தவிர அவுட் ஆகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் எந்த ஆர்டரிலும் இறங்க தயாராகவும் இருக்கிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறங்கிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. தொடக்க வீரருக்கான போட்டியில் தனது பெயரையும் இணைத்து கொண்டுள்ளார் ஹனுமா விஹாரி. 

ஒரு பேட்ஸ்மேனாக எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்குவதற்கு தயார் என்றும், அணி நிர்வாகம் எந்த பேட்டிங் ஆர்டரில் ஆட சொன்னாலும் ஆடுவேன் என்றும் விஹாரி தெரிவித்திருந்தார். 

ஆனால் பிரித்வி ஷாவும் ஷுப்மன் கில்லும் இருப்பதால், விஹாரி தொடக்க வீரராக இறக்கப்பட வாய்ப்பு மிகக்குறைவுதான். பிரித்வி ஷாவுக்கும் கில்லுக்கும் இடையேதான் கடும்போட்டி நிலவுகிறது. ஆனால், தொடக்க வீரராக இறங்குவதில் தனக்கும் பிரித்வி ஷாவுக்கும் இடையே எந்தவிதமான போட்டியும் இல்லையென்று கில் தெரிவித்திருந்தார். ஆனால் இருவரில் யார் என்ற கேள்வி வந்தபொழுதே அது போட்டியாகிவிட்டது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிரித்வி, கில் ஆகிய இருவருமே ஒரே பள்ளியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் இருவருமே புதிய பந்தை எதிர்கொண்டு ஆடுவதில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமல்லாது அதை விரும்புபவர்கள். சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்பவர்கள். ரோஹித் இல்லாததால் பிரித்வி மற்றும் கில் ஆகிய இருவருக்கும் இடையே, மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது யார் என்பதில் போட்டி நிலவுகிறது. இதுமாதிரியான போட்டி நல்லதுதான். 

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்.. ஓபனிங் பேட்ஸ்மேனாக சர்ப்ரைஸ் தேர்வு

இருவருமே மிகச்சிறந்த திறமைசாலிகள். இருவரில் யார் அணியில் இடம்பெறுகிறார், யார் இடம்பெறவில்லை என்பதை கடந்து இருவருமே மிகச்சிறந்த வீரர்கள் என்பதுதான் நிதர்சனம். அவர்களுக்கு வானமே எல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இருவரில் ஒருவர் ஆடும் லெவனில் இடம்பெற்றாலும், மற்றவரும் அணியுடன் தான் இருக்கப்போகிறார் என்று சாஸ்திரி தெரிவித்தார்.