இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. அதன்பின்னர் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது. 

ஹாமில்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 347 ரன்களை குவித்தது. 348 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து வீரர்கள் ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ் மற்றும் டாம் லேதம் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 49வது ஓவரிலேயே எட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட 4 ஓவர்கள் வீசுவதற்கான நேரத்தை இந்திய அணி அதிகமாக எடுத்துக்கொண்டதால் ஊதியத்தில் 80% இந்திய அணிக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 4வது டி20 போட்டி மற்றும் 5வது டி20 போட்டி ஆகிய 2 போட்டிகளிலுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக எடுத்துக்கொண்டதற்காக முறையே இந்திய அணிக்கு 40% மற்றும் 20% அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக செய்த தவறையே திரும்ப செய்து அபராதம் கட்டுகிறது இந்திய அணி. 

ஒரு தவறை, ஒருமுறையோ அல்லது இரு முறையோ அல்லது எப்போதாவதோ செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக மூன்று முறை இந்திய அணி, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அபராதம் கட்டுவது, படுமோசமான செயல்.