இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நட்சத்திர ஸ்பின்னராக ஜொலித்துவருகிறார் சாஹல். கேப்டன் விராட் கோலியின் ஆஸ்தான வீரர்களில் சாஹலும் ஒருவர். சாஹல் 2016ம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் ஆடிவருகிறார். குல்தீப் யாதவுடன் இணைந்து சாஹல், இந்திய அணிக்கு பல அருமையான ஸ்பெல்களை வீசி வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். 

இந்திய அணிக்காக 52 ஒருநாள் போட்டிகளில் ஆடி 91 விக்கெட்டுகளையும் 42 டி20 போட்டிகளில் ஆடி 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இயங்கிவரும் சாஹல், டிக்டாக்கிலும் வீடியோக்களை வெளியிட்டுவந்தார். குறிப்பாக லாக்டவுனில் பெரும்பாலான நேரத்தை இதில்தான் செலவிட்டு கொண்டிருந்தார். அவரது சமூக வலைதள செயல்பாட்டை கண்டு யுவராஜ் சிங் அவரை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார் சாஹல். சாஹலின் இந்த திடீர் பதிவைக்கண்டு, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 

சாஹல் மணக்கவுள்ள பெண்ணின் பெயர் தனாஸ்ரீ. மருத்துவரான இவர், நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் நடனமாடி தனது திறமையை வெளிக்காட்டுவதுடன், பார்வையாளர்களையும் மகிழ்வித்துவருகிறார். அவரது யூடியூப் சேனலை 15 லட்சம் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.