உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியது. உலக கோப்பை தோல்வி எதிரொலியாக இந்திய அணியை வலுவாக கட்டமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பது தெரிகிறது. 

கேப்டனை மாற்றுவது குறித்த கருத்துகளும் உலாவருகின்றன. ஒருநாள் அணிக்கு கோலியை தூக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. பிசிசிஐ அதிகாரி ஒருவரே, ரோஹித் கேப்டனாவதற்கு இதுவே சரியான தருணம் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இதெல்லாம் உடனே நடக்கக்கூடிய விஷயமல்ல. 

உலக கோப்பை முடிந்து நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு செல்கிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது.

முதலில் டி20 போட்டிகளும் அடுத்து ஒருநாள் போட்டிகளும் கடைசியாக டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான அணி வரும் 19ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு 19ம் தேதி கூடி முடிவு செய்யவுள்ளது. கூட்டத்திற்கு பின்னர் 19ம் தேதி அணி அறிவிக்கப்படும்.