இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் ஓய்வை பற்றி சற்றும் யோசிக்காத தோனி, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து ஒதுங்கினார். 

இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்கும் பணியை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால், தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. 

தோனிக்கு ஃபேர்வெல் போட்டி மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என கருதப்பட்ட நிலையில், கேப்டன் கோலியின் டுவீட், தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கப்பாரோ என்ற சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு நாளை கூடுகிறது. 

இந்நிலையில், நாங்கள் இருவரும் இணைந்து களத்தில் ஃபீல்டர்களிடமிருந்து 2 ரன்களை திருடுவோம்.. என்னுடன் சேர்ந்து அந்த குற்றத்தில் ஈடுபடும் அந்த நபர் யார்? என்று புதிர் போடும் வகையில், தோனியின் பின்பக்க புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு நாளை நடக்கவுள்ள நிலையில், கோலி இன்று தோனி பற்றி டுவீட் போட்டிருப்பது, தோனி அணியில் இணையவுள்ளதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.