உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று நாளையுடன் முடிவடைகிறது. இந்திய அணி இந்த உலக கோப்பையில் அபாரமாக ஆடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. 

கடந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியதை அடுத்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணிக்கு லீக் சுற்றில் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டி எஞ்சியுள்ளது. அது நாளை நடக்கவுள்ளது. 

இந்தியா - வங்கதேசம் இடையேயான போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலம் அடைந்தவர் சாருலதா என்ற 87 வயது மூதாட்டி. இந்திய அணியின் தீவிர ரசிகையான அவர், இந்த வயதிலும் மைதானத்திற்கு வந்து இந்திய அணியை உற்சாகப்படுத்தினார். 

மூதாட்டி சாருலதாவின் கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் இந்தியாவின் மீதான பற்று ஆகியவற்றை கண்டு வியந்துபோன இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் போட்டிக்கு பின்னர் அந்த மூதாட்டியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். 

அப்போது, அந்த மூதாட்டியிடம் எஞ்சிய போட்டிகளையும் மைதானத்தில் வந்து பார்த்து தங்களை உற்சாகப்படுத்துமாறு கோலி கேட்டுக்கொண்டார். அதற்கு, அனைத்து போட்டிகளுக்கும் டிக்கெட் எடுத்து வருமளவிற்கு தன்னிடம் பொருளாதார வசதி இல்லை என்று அந்த மூதாட்டி கூறியதும், தானே டிக்கெட் பெற்றுத்தருவதாக கோலி உறுதியளித்ததாக அந்த மூதாட்டி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கொடுத்த வாக்கை கோலி காப்பாற்றியிருப்பதாக அந்த மூதாட்டியின் பேத்தி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டிக்கான டிக்கெட், 2 அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டை கோலி கொடுத்ததாக அந்த மூதாட்டியின் பேத்தி தெரிவித்துள்ளார்.