உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்றது, அணி நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்திய அணி, லீக் சுற்றில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்த நிலையில், அரையிறுதியில் நியுசிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. அந்த போட்டியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 5 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தநிலையில், தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்காமல் தினேஷ் கார்த்திக்கை இறக்கிவிட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

இந்த விவகாரத்தில், ஒட்டுமொத்த அணியும் தோனியை ஏழாம் வரிசையில் இறக்கியதற்கு உடன்பட்டது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். ஆனால் இந்த முடிவு, கேப்டன் கோலி மற்றும் சீனியர் வீரர்களுடன் கலந்தாலோசிக்காமல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தன்னிச்சையாக எடுத்த முடிவாக தெரிகிறது. 

ஏனெனில் அந்த போட்டிக்கு இடையே, பெவிலியனில் அமர்ந்திருந்த ரவி சாஸ்திரியிடம், கேப்டன் விராட் கோலி வேகமாக வந்து கோபமாக ஏதோ பேசினார். இதுகுறித்துத்தான் கோலி பேசியிருப்பார் என்பது உறுதியில்லை என்றாலும், அணியின் திட்டம் மற்றும் பேட்டிங் ஆர்டர் குறித்துத்தான் பேசியிருப்பார் என்பதில் மாற்றமில்லை. விராட் கோலி சென்ற வேகத்தை பார்க்கையில், சாஸ்திரியின் முடிவு குறித்த அதிருப்தியைத்தான் வெளிப்படுத்தியிருப்பார் என்று தெரிந்தது. 

அதுமட்டுமல்லாமல் ரவி சாஸ்திரியின் தன்னிச்சையான முடிவுகள், அணியின் சீனியர் வீரர்களை அதிருப்தியடைய செய்ததாக தெரிகிறது. ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் மீண்டும் சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை. மேலும் வீரர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக சாஸ்திரி நீடிக்க வாய்ப்பில்லை. அடுத்த உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார்படுத்தும் விதமாக புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.