புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களை ராஞ்சியில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி கௌரவப்படுத்தியுள்ளது. 

கடந்த மாதம் 14ம் தேதி ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் புல்வாமா பகுதியில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாமை ஒட்டுமொத்தமாக அழித்தது. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் ராணுவ உடையின் டிசைனில் வடிவமைக்கப்பட்ட தொப்பியை அணிந்து ஆடுகின்றனர். இந்த தொப்பியை அனைத்து வீரர்களுக்கும் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி வழங்கினார். 

பின்னர் டாஸ் போடும் போது பேசிய கேப்டன் கோலி, இன்றைய போட்டிக்கான அனைத்து வீரர்களின் ஊதியத்தையும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக தேசிய பாதுகாப்புத்துறைக்கு வழங்குவதாக கோலி தெரிவித்தார். ஒவ்வொரு குடிமகனும் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்யுமாறும் கோலி வலியுறுத்தியுள்ளார்.

கேரள வெள்ளத்தின்போதும் ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஊதியத்தை இந்திய வீரர்கள் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.