விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறந்து விளங்குகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக திகழ்வதுடன், சர்வதேச அரங்கில் கெத்தாக வலம்வருகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால் ஆகியோர் தலைசிறந்து விளங்குகின்றனர். 

பவுலிங்கில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆக, ஒட்டுமொத்தமாக இந்திய அணி வீரர்கள் தான் சர்வதேச அரங்கில் அசத்திவருகின்றனர். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை அண்மையில் வெளியானது. டெஸ்ட் தரவரிசையில் 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 10 புள்ளிகள் பின் தங்கி 109 புள்ளிகளை பெற்றுள்ளது. எனவே இப்போதைக்கு இந்திய அணியை எந்த அணியாலும் தரவரிசையில் பின்னுக்குத்தள்ளிவிட முடியாது. 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டக் அவுட்டானதால், விராட் கோலி, முதலிடத்திலிருந்து இரண்டாமிடத்திற்கு பின் தங்கிவிட்டார். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி இரண்டாமிடத்திலும், புஜாரா நான்காமிடத்திலும் ரஹானே ஐந்தாமிடத்திலும் ரோஹித் சர்மா பத்தாமிடத்திலும் உள்ளனர். இவ்வாறு டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் பத்து வீரர்களில் 4 பேர் இந்திய வீரர்கள். முதலிடத்தில் ஸ்மித் உள்ளார். டாப் பத்தில் ஒரேயொரு இங்கிலாந்து வீரர்தான் உள்ளார். அது ஜோ ரூட். அதேபோல டாப் பத்து பேட்ஸ்மேன்களில் ஸ்மித்தை தவிர எந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனும் இல்லை. ஆனால் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டாம் லேதம் என மூன்று நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 

அதேபோல பவுலர்கள் தரவரிசையிலும் இந்திய பவுலர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதலிடத்தில் கம்மின்ஸ், இரண்டாமிடத்தில் ரபாடா உள்ளனர். மூன்றாமிடத்தில் ஹோல்டர் உள்ளார். நான்காமிடத்தில் பும்ராவும் ஏழாமிடத்தில் ஷமியும் பத்தாமிடத்தில் அஷ்வினும் உள்ளனர். 

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் 4 பேட்ஸ்மேன்களும் பவுலர்கள் தரவரிசையில் டாப் பத்தில் 3 இந்திய பவுலர்களும் உள்ளனர்.