அண்டர் 19 உலக கோப்பை இறுதி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியபோது, இந்திய வீரர்கள் த்ருவ் ஜுரேல் மற்றும் அதர்வா ஆகிய இருவரும், ரன் அவுட்டில் முடிவெடுக்க முடியாத வகையில் டிவி அம்பயரையே குழம்ப வைத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இதன் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் சிறப்பாக ஆடி 88 ரன்களை குவித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 177 ரன்களை அடித்தது. அவரும் சரியாக ஆடியிருக்கவில்லையென்றால், இந்த ஸ்கோர் கூட வந்திருக்க முடியாது. 177 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்து கொடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் 105 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி. ஆனால் அந்த அணியின் கேப்டன் அக்பர் அலியின் பொறுப்பான பேட்டிங்கால் அந்த அணி இலக்கை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது த்ருவ் ஜுரேல் மற்றும் அதர்வா அன்கோல்கர் ஆகிய இருவரும் தேர்டு அம்பயரையே முடிவெடுக்க முடியாத அளவிற்கு குழப்பிவிட்டனர். 43வது ஓவரின் 2வது பந்தை த்ருவ் ஜுரேல் எதிர்கொண்டார். அதை ஆஃப் திசையில் தட்டிவிட்டு ஜுரேல் ரன் ஓடினார். ஆனால் அதற்கு ரன் ஓடுவதற்கு தயங்கிக்கொண்டே ஓட தொடங்கிய அதர்வா, ஃபீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் த்ரோ அடித்ததை கண்டதும், பின்வாங்கினார். எனவே அதர்வா மீண்டும் பவுலிங் க்ரீஸை நோக்கி ஓடினார். ஆனால் இந்த ரன் ஓடுவதில் சற்றும் பின்வாங்காத ஜுரேலும் பவுலிங் க்ரீஸுக்கு ஓடினார். 

இதையடுத்து இருவருமே மிகத்துல்லியமாக ஒரே நேரத்தில் பவுலிங் க்ரீஸை அடைந்தனர். இதற்கிடையே விக்கெட் கீப்பர் பேட்டிங் முனையில் ரன் அவுட் செய்தார். இதை ரிவியூ செய்த டிவி அம்பயர், இதில் யாருக்கு அவுட் கொடுப்பது என்று தெரியாமல் நீண்ட நேரம் ஆய்வு செய்தார். இருவரில் ஒருவர், மற்றொருவரை விட முன்பாக க்ரீஸை அடைந்திருந்தால், அவர் நாட் அவுட்டாக இருந்திருப்பார். மற்றவருக்கு அவுட் கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த சம்பவத்தில் இருவருமே ஒரே நேரத்தில் க்ரீஸை அடைந்ததால், யாருக்கு அவுட் கொடுப்பது என்பதில் குழப்பமடைந்த டிவி அம்பயர், ஒருவழியாக இறுதியில் ஜுரேலுக்கு அவுட் கொடுத்தார். 

ஏனெனில், அந்த பந்தில் பேட்டிங் ஆடியது ஜுரேல் தான். பவுலிங் முனையில் இருந்த அதர்வா மீண்டும் அவரது க்ரீஸுக்கு திரும்பினார். எனவே பேட்டிங் க்ரீஸில் இருந்த ஜுரேல் தான் அவரது க்ரீஸில் இல்லை என்பதால் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. அந்த வீடியோ இதோ...

Log In or Sign Up to View

See posts, photos and more on Facebook.